கடல் தாண்டி ......சுட்டுவிரல்



திரைகடலோடியும் திரவியம் தேடு என்று பண்டைய தமிழன் தன்னை வழி நிலைப்படுத்த ஆக்கியபழமொழிகளிலொன்று.
ஆனால் இன்றைய தமிழன் அதே திரைகடலோடி  தன் வாழ்க்கையை அறுக்கும் நிலைகள்.
ஓவ்வொரு நாளும்  ஒவ்வொரு கடற்பரப்புகளில் ஒவ்வொருவிதமாக விபத்துகளில் சிக்கும் மனிதர்களில் தமிழர்களும் அடங்குவது வேதனையானது.
முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்தும் பணமீட்டும்
முயற்சிகளின் ஈடுபாட்டில்  நடுத்தர மற்றும் ஏழ்மை மக்களை
குறிவைக்கின்றனர்.
மக்களை சாவின் விளிம்பில்  வைத்தோ அல்லது அவர்களை சாகடித்தோ அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையமுடியுமோ இல்லையோ தங்கள் பணவரவை மட்டுமே இலக்காக வைத்து செயற்படுவது நியாயமானதா?
என்றாலும் நடுத்தரவர்க்க மக்கள் இந்த அபாயகரமான
பயணங்களுக்காக தொடர்ந்தும் ஏமாறுவது எவ்வாறு? நாளுக்கு நாள்
வரும் செய்திகள்  பயணிக்கும் மக்கள் காதுகளுக்கு எட்டவில்லையா
என்ற கேள்வி எழுகிறது.
என்றாலும் தொடர்ச்சியாக இப்படியான படகுப் பயணங்களில் வாழ்க்கையை தொலைக்கும் அல்லது இழக்கும் எம்மக்கள் கடலோடி
நாடு தாண்டி சாதிக்கபோவது என்ன?
தமிழின இருப்பு திட்டமிட்ட வகையில் சிதறடிக்கபடுகிறதோ என்று
எண்ணத்தோன்றுகின்றது
ஏமாற்றங்களும் கவலைகளும் சோதனைகளும் அவ்வப்போது
சாதனைகளும் அவையும் வேதனைகளாகுமோ என்ற மன உளைச்சல்களும்  தாங்கிய வாழ்வின்   வரலாறுகள்
சொல்லிச்சென்ற பாடங்களில் மக்கள் தமக்குரித்தான சுய சிந்தனையின் வழி சிந்தித்து செயற்படுவது சிறந்தது.
இல்லையெனில் இன இருப்பும் பரம்பலும் கேள்விக்குறியாகும் நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய காலங்களில் ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகின்றது.

சரி கடல் தாண்டிய புலத்து தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.
அழகான இரு குழந்தைகளுக்கு தாய்.தாயும் அழகியவள் தான்.
அதுவும் தவமிருந்து பெற்ற குழந்தைகள், நீண்ட காலத்தின் கிடைத்த  அரிய செல்வங்கள்.உற்றமும் சுற்றமும் மகிழ்ந்திருந்த காலங்களில்
அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி
அந்த பெண் பெற்ற குழந்தைகளையும் கணவனையும் விட்டு விட்டு இன்னொரு ஆணோடு சேர்ந்து சென்றுவிட்டாள்.
இன்று அந்த கணவனையும் பெற்ற குழந்தைகளையும் வெறுப்பது போல் அவளின் செயற்பாடுகள்.குறித்த பெண் தாயகத்திலிருந்து பலமுறை பயண முயற்சியில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல லட்சக்கணக்கில் ஏஜென்சிகளுக்கான செலவில் அந்த குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் கணவனை கடும்பிரயத்தனத்தில் அடைந்தவள்.
குறிப்பிட்ட அந்த பெண்ணின் குழந்தைகளின் கணவர் உற்றவர்களிடமும் 
சுற்றவர்களிடமும் நேரடியாக சென்று அழுது கொண்டிருக்கிறார் என்பது
தகவல்.
தவறு எங்கிருக்கின்றதென்றோ அல்லது அது எதனால் எப்படி
ஏற்பட்டதென்றோ  ஆராய்வதல்ல நோக்கம்.
குடும்பத்தின் அடிப்படையான கணவன் மனைவி இருவருக்கும் இது
பொருந்தும்.
யுத்த சூழ் நிலைகளால் அதன் வடுக்களை சுமந்து வந்தவர்கள் நாம்.
சோதனைகளையும் சாதனைகளாக்கிய மறவர்கள் என்று பெருமை
கொள்பவர்கள் நாம்.
ஆமாம் அதற்கு  உரித்தானவர்கள் தான்.
யுத்த சூழ் நிலைகளையும் எமது புலத்து வாழ்வின் இருப்பிற்கு  ஏதோவொரு வகையில் பயன்படுத்துக்கொண்டவர்கள்.
அதன் மூலம்  மிகப்பெரிய ஆட்பலத்தையும் பல காலங்களிலும்
ஒருங்கிணைத்தோம்.ஆனால் சமுதாயத்தின் அடிப்படையான குடும்ப
வாழ்க்கை சூழலில் ஏதோவொரு தவறான வாழ்க்கை அணுகுமுறைகளை கையாள்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
தமது வாழ்க்கையை சரியான பாதையில் நெறிபடுத்தத்தேவையான
பொருளாதார வாழ்வைத்தரும் நாடுகளில் வசிக்கக் கிடைத்த
சந்தர்ப்பங்களை தவறவிட்டு வாழ்க்கையை தொலைக்கின்றோமோ என்று
எண்ணத்தோன்றுகின்றது. சட்ட உரிமை ஒருவர் சட்டத்தின் வாயிலாக பிரிந்து சென்று தனக்கு விரும்பியவரோடு வாழ அனுமதிக்கின்றது என்ற
சந்தர்ப்பத்தை மட்டுமே பயன்படுத்த தூண்டப்பட்டிருக்கின்றார்கள்.
அதைவிட குடும்பத்திற்குள் என்ன  பிரச்சனை என்பதை அலசுவது
தேவையற்ற ஒரு  விடயமே.
ஏனெனில் கூடிவாழ்ந்த மகிழ்ச்சிகள்,புரிதல்கள்  புரிந்துணர்வுகள்,
வேதனைகள், எல்லாவற்றையும் தாண்டிய எங்கள் சமுதாயத்திற்கு
குடும்பத்துக்குள் சிக்கலும் பிரச்சினையும் என்று சிந்திப்பதில் அர்த்தம்
இல்லை.அவையெல்லாம் தவறுகளுக்காக தெரிந்தெடுக்கபடும்
காரணங்கள்.
தனது குடும்பம், கணவர் அல்லது மனைவி,,அழகிய குழந்தைகள், கண்டம்
தாண்டி வந்த வேதனைப்பயணங்கள், பலலட்சம்
பயணத்துக்காக இழப்பு,எப்படியென்றாலும் அவள் அல்லது அவன்
வருகைக்காக காத்திருந்த கணவரின் அல்லது மனைவியின்
வேதனைகள், கல்யாண வாழ்க்கைக்காக உற்றமும் சுற்றமும் கூடி
நின்று வாழ்த்திய வாழ்த்துக்கள் அவையெல்லாம் ஒரு
ஓட்டத்தோடு  தூசிபோல் அள்ளிச்செல்லபடுகிறது.

இன்ப துன்ப நம்மை தீமை என்று எதற்கும்  பக்கபலமாக
இருக்கும் எம்மவர் வாழ்வு முறைமைகள் சிதைந்து போகின்ற
கவலைகிடமான சூழலை உருவாக்குகின்றோம் என்று
உறுதியாகத்தெரிந்தே அந்த வழிபொவது ஏற்கக்கூடிய ஒன்றா?

திரைகலோடியும் திரவியம் தேடுஎன்று எம் மூத்தவர்கள்  சொல்லிச்சென்ற 
திரவியங்களும் செல்வங்களும் இவைதானா?

பண்பாடு கலாச்சாரம் தனித்துவம் இவையெல்லாம் தமிழருக்கு அடையாளங்கள் என்று பெருமை பேசும் இனத்துக்கான உரித்துடைய நாம் அவற்றை உதறித்தள்ளுவதும் அதற்கு  ஆமோதிக்கும் காரணங்களையும்
ஒன்று சேர்த்து நியாயம்  கற்பிப்பது எந்தவகையில் நியாயம்?

குடும்ப முரண்பாடுகள் நியாயப்பாடுகள்  ஒருபுறமிருக்க கட்டுப்கோப்பான ஒரு சமுதாய வட்டத்துக்குள்ளிருந்து வந்த எம்மவர்கள் அந்த வட்டத்திலிருந்து திடீரென விலகுவது வீசும் காற்றில் அந்தரத்தில் பறக்கும் பஞ்சுகளைப்போல எங்கும் பறக்கும் நிலைகளாக காணப்படுகிறது.பறக்கும் பஞ்சுகள் ஒரிடத்தில் குவியப்போவதுமில்லை.

இப்படியாக தனித்துவத்தமிழன் புலத்தில் தன் பண்பாட்டை,
கலாச்சாரத்தை, ஏன் மொத்தத்தில் வாழ்க்கையைத் தொலைத்தான் என்று காலத்தின் வரலாறுகளில் எழுதப்பட்டுவிடும் என்று சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகிறது

2 comments:

Rajaji Rajagopalan said...

நன்கு ஆய்ந்தறிந்த செய்திகளை ஆதாரமாய்க் கொண்ட நல்ல பயனுள்ள கட்டுரை. வாழ்த்துகள், நண்பரே.

Anonymous said...

''...பறக்கும் பஞ்சுகள் ஒரிடத்தில் குவியப்போவதுமில்லை...''
நல்ல மொழிப் பிரயோகம்.
பல பிரச்சனைகள் தொடப்பட்டுள்ளது.
ம்...ம்..என்ன செய்யமுடியும்!.
ஒரு காரணம் வெளிநாட்டு வாழ்க்கை முறையும்
எண்ணங்களை குளப்புகிறது.
(அல்லது கலாச்சாரமுரண்பாட்டின் தாக்கமும் தான்)
பயணம் தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.